கவர்னரின் தொப்பி நிறத்துக்கும், மனதின் நிறத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை- சரத்பவார் தாக்கு
கவர்னரின் தொப்பி நிறத்திற்கும், மனதின் நிறத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
கவர்னரின் தொப்பி நிறத்திற்கும், மனதின் நிறத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என சரத்பவார் கூறியுள்ளார்.
கவர்னர் சர்ச்சை பேச்சு
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி குஜராத்திகளும், ராஜஸ்தானியர்களும் இல்லையென்றால் மாநிலத்தில் பணமே இருக்காது, மும்பை நிதி தலைநகராக இருக்காது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னரின் இந்த பேச்சுக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் கவர்னர் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் கவர்னரும் தனது பேச்சு குறித்து விளக்கம் மட்டும் அளித்து இருந்தார்.
வித்தியாசம் இல்லை
இந்த நிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரின் தொப்பி நிறத்திற்கும், மனதின் நிறத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சரத்பவார் கூறியுள்ளார். உத்தரகாண்டை சேர்ந்த பகத்சிங் கோஷ்யாரி எந்த நேரமும் கருப்பு நிற தொப்பி அணிந்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்னர் குறித்து சரத்பவார் கூறியதாவது:-
பகத்சிங் கோஷ்யாரியின் தொப்பி நிறத்துக்கும், மனதின் நிறத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மராட்டியம் எல்லா சமூக, மத, மொழி மக்களை கொண்டு உள்ளது. சாமானியனின் கடின உழைப்பால் மும்பை வளர்ந்து உள்ளது. பகத்சிங் கோஷ்யாரி ஏற்கனவே சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா புலே, சாவித்ரிபாய் புலே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.