கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு - விக்ரோலியில் சோகம்


கணவர் இறந்த அதிர்ச்சியில்  மனைவியும் உயிரிழப்பு - விக்ரோலியில் சோகம்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் விக்ரோலியில் நடந்து உள்ளது.

மும்பை,

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் விக்ரோலியில் நடந்து உள்ளது.

கணவர் பலி

மும்பை விக்ரோலியை சேர்ந்தவர் பினு கோஷி (வயது45). இவரது மனைவி பிரமிளா (43). இவர்களுக்கு 21 வயது மற்றும் 18 வயதில் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 7-ந்தேதி பினு கோஷிவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள அம்பேத்கர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். அன்றைய தினம் காலை 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பினு கோஷி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு பற்றி தகவல் அறிந்த அவரது மனைவி துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

மனைவியும் உயிரிழப்பு

இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து பிரமிளாவை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். அக்கம்பக்கத்தினர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். வீட்டில் இருந்த பிரமிளா கணவரின் உயிரிழப்பை தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்ததால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பிரமிளாவிற்கு சிகிச்சை அளித்தும் மதியம் 2 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story