சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி சிவசேனா வழக்கு- மும்பை ஐகோாட்டில் மனு தாக்கல்
சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி சிவசேனா சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி சிவசேனா சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா பிளவு
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே காலத்தில் இருந்து ஆண்டுதோறும் மும்பை சிவாஜி பார்க் பூங்காவில் சிவசேனா கட்சி சார்பில் தசரா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி அணி வெளியேறி ஆட்சியை பிடித்ததில் இருந்து சிவசேனா 2- ஆக பிளவுபட்டுள்ளது.
இந்த நிலையில் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவதில் 2 அணிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
2 அணிகள் சார்பிலும் சிவாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டில் மனு
இந்த விவகாரத்தில் மும்பை மாநகராட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து இரு பிரிவினரும் அந்த இடத்திற்கு மாற்றாக மும்பையில் உள்ள பாந்திர குர்லா காம்பிளக்ஸ் வளாகத்திலும், எம்.எல்.ஆர்.டி.ஏ. மைதானத்திலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாந்திரா குர்லா காம்பிளக்சில் பேரணி நடத்த அனுமதி கிடைதது.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 5-ந் தேதி சிவாஜி பூங்காவில் பேரணி நடத்த அனுமதி கோரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை சிவசேனா கட்சி செயலாளர் அனில் தேசாய் வக்கீல் ஜோயல் கார்லோஸ் மூலம் தாக்கல் செய்தார்.
அவசர வழக்கு
மனுவியில் கூறியிருப்பதாவது, " சிவாஜி பார்க்கில் 1966-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தசரா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்து வந்தது. 2020-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக பேரணியை நடத்த முடியவில்லை.
இந்தநிலையில் சிவாஜி மைதானத்தில் பொதுகூட்டம் நடத்த அனுமதி கோரி ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மீது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை, எனவே ஐகோர்ட்டை அணுகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பு மைதானத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யவேண்டி உள்ளது. எனவே இதுகுறித்து மாநகராட்சி விரைந்து முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அவசர வழக்காக விசாரிக்க கோரிய இந்த மனு நீதிபதிகள் ஆர்.டி. தனுகா மற்றும் கமல் கட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை அவர்கள் இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.