நிதிஷ் குமார், மம்தா, கெஜ்ரிவால் போன்றவர்களை விட 'சரத்பவார் மிகப்பெரிய தலைவர்' - அஜித்பவார் பேச்சால் பரபரப்பு


நிதிஷ் குமார், மம்தா, கெஜ்ரிவால் போன்றவர்களை விட சரத்பவார் மிகப்பெரிய தலைவர் - அஜித்பவார் பேச்சால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Jun 2023 1:00 AM IST (Updated: 22 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை விட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மிகப்பெரிய தலைவர் என அஜித்பவார் கூறினார்.

மும்பை,

நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை விட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மிகப்பெரிய தலைவர் என அஜித்பவார் கூறினார்.

நிறுவன நாள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக பீகார் தலைநகர் பட்னாவில் நாளை (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்பட 17 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழாவில் கலந்துகொண்ட கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் பேசியதாவது:-

மிகப்பெரிய தலைவர்

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் மற்றும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். சரத்பவார் இவர்கள் அனைவரை விடவும் மிகப்பெரிய தலைவர். எனவே மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது சொந்த பலத்தில் வெற்றிபெறும் இலக்கை நோக்கி ஏன் செயல்பட முடியாது. சுயபரிசோதனை அவசியம். தேவைப்பட்டால் இந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் பரபரப்பு

மராட்டியத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி வருகிற மாநகராட்சி, நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களை கூட்டணியாக சந்திக்க திட்டமிட்டு உள்ளன. மேலும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாட்னாவில் நாளை எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ள சமயத்தில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story