உத்தவ் தாக்கரேக்கு பின்னடைவு: சிவசேனா சின்னத்தை உரிமை கோரும் ஷிண்டே கடிதம் மீது முடிவு எடுக்கலாம்- தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


உத்தவ் தாக்கரேக்கு பின்னடைவு: சிவசேனா சின்னத்தை உரிமை கோரும் ஷிண்டே கடிதம் மீது முடிவு எடுக்கலாம்- தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 28 Sep 2022 3:00 AM GMT (Updated: 28 Sep 2022 3:00 AM GMT)

சிவசேனா கட்சி சின்னத்தை உரிமை கோரும் ஏக்நாத் ஷிண்டே கடிதம் மீது முடிவு எடுக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

மும்பை,

சிவசேனா கட்சி சின்னத்தை உரிமை கோரும் ஏக்நாத் ஷிண்டே கடிதம் மீது முடிவு எடுக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

சிவசேனாவில் பிளவு

மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்-மந்திரி பதவி போட்டி காரணமாக தேர்தலுக்கு பிறகு கூட்டணி முறிந்தது.

மேலும் கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினார். சிவசேனாவின் மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேருடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரியானார். இதுதவிர சிவசேனாவின் 18 எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு தாவினர். இதனால் சிவசேனா 2 அணியாக உடைந்தது.

உரிமை கோரிய ஷிண்டே அணி

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அளித்தது. அதில், நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், எங்களுக்கு தான் கட்சியின் வில் அம்பு சின்னத்தை தர வேண்டும் என்றும் கோரியது.

ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை, வில் அம்பு சின்னம் தொடர்பான ஏக்நாத் ஷிண்டே தரப்பின் கடிதத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க தடை விதிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.

முடிவு எடுக்க தடை இல்லை

இது தொடர்பான மனுக்களை டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உத்தவ் தாக்கரே தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் சிவசேனா கட்சி சின்னத்தை உரிமை கோரி ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த கடிதத்தை பரிசீலித்து முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னம் தங்களுக்கு தான் கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த தீர்ப்பு உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


Next Story