மும்பையில் பரபரப்பு சம்பவம்; துப்பாக்கி முனையில் இசை நிறுவன நிர்வாகி கடத்தல் - சிவசேனா எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு


தினத்தந்தி 10 Aug 2023 7:45 PM GMT (Updated: 10 Aug 2023 7:45 PM GMT)

மும்பையில் இசை நிறுவன நிர்வாகியை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டிய முதல்-மந்திரி ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ. மகன் உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை,

மும்பையில் இசை நிறுவன நிர்வாகியை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டிய முதல்-மந்திரி ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ. மகன் உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கடத்தல்

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள மியூசிக் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ராஜ்குமார் சிங். இவருக்கும் மற்றொரு மியூசிக் நிறுவன உரிமையாளருமான மனோஜ் மிஸ்ரா என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் சிங் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் இருந்தார். அப்போது அவருக்கு போன் ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசியவர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வேவின் அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார். அதற்கு ராஜ்குமார் சிங், இப்போது தன்னால் வரமுடியாது, சனிக்கிழமை வருகிறேன் என கூறியதாக தெரிகிறது. அதன்பிறகு சுமார் திடீரென 10-க்கும் மேற்பட்டவர்கள் ராஜ்குமார் சிங் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், கூப்பிட்டால் வர முடியாதா என கூறி ராஜ்குமார் சிங்கை அவரது ஊழியர்கள் முன் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை அலுவலகத்தில் இருந்து இழுத்து வந்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு

இதுதொடர்பாக அவரது அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்தநிலையில் தகிசரில் உள்ள பிரகாஷ் சுர்வே எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு கும்பல் ராஜ்குமார் சிங்கை கடத்தி சென்று உள்ளது. அங்கு பிரகாஷ் சுர்வேவின் மகன் ராஜ் மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு இருந்து அவர் அருகில் உள்ள கட்டிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி ராஜ்குமார் சிங்கிடம் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து பெற்று உள்ளனர். பின்னர் ராஜ்குமார் சிங் மீண்டும் பிரகாஷ் சுர்வே அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க கூடாது என கும்பல் அவரை மிரட்டியது. இந்தநிலையில் போலீசார் பிரகாஷ் சுர்வே அலுவலகத்துக்கு சென்று ராஜ்குமார் சிங்கை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பிரகாஷ் சுர்வே எம்.எல்.ஏ. மகன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story