மராட்டியம் வந்தடைந்தது, ராகுல்காந்தி நடைபயணம்- உற்சாக வரவேற்பு


மராட்டியம் வந்தடைந்தது, ராகுல்காந்தி நடைபயணம்- உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 7 Nov 2022 6:45 PM GMT (Updated: 7 Nov 2022 6:46 PM GMT)

தெலுங்கானாவில் நிறைவு பெற்ற ராகுல்காந்தி நடைபயணம் மராட்டியம் வந்தடைந்தது. மாநில காங்கிரஸ் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மும்பை,

தெலுங்கானாவில் நிறைவு பெற்ற ராகுல்காந்தி நடைபயணம் மராட்டியம் வந்தடைந்தது. மாநில காங்கிரஸ் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடைபயணம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை(பாரத் ஜடோ) நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது நடைபயணம் கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானா சென்றடைந்தது. அங்கு அவரது நடைபயணம் நேற்றுடன் முடிந்தது. இது நாள் வரை அவர் 61 நாட்கள் நடந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவில் ராகுல்காந்தி நடைபயணம் மராட்டியத்திற்குள் நுழைந்தது. நாந்தெட் மாவட்டம் தெக்லூரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையை அடைந்த அவரது நடைபயணத்துக்கு மராட்டிய காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைகளில் ஒற்றுமை ஜோதிகளை ஏந்தினர்.

2 பொதுக்கூட்டங்கள்

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தெக்லூர் பஸ் நிலையத்தில் இருந்து முறைப்படி தொடங்கும் ராகுல்காந்தியின் நடைபயணம் மராட்டியத்தில் 14 நாட்கள் பயணிக்கிறது.

15 சட்டசபை தொகுதிகள், 6 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக 382 கி.மீ. தூரம் மராட்டியத்தில் ராகுல்காந்தி நடக்க உள்ளார். மேலும் அவர் வருகிற 10-ந் தேதி நாந்தெட்டிலும், 18-ந் தேதி புல்தானாவிலும் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இதற்கிடையே நடைபயணத்தில் பங்கேற்குமாறு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அழைப்பு விடுத்தனர்.

ஆதித்ய தாக்கரே பங்கேற்பு?

இதில் சரத்பவார் ராகுல்காந்தியுடன் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக அவரது கட்சி அறிவித்தது. ஆனால் சரத்பவார் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேநேரத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் அவரது மகனும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே நடைபயணத்தில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

மராட்டியத்தில் 2 வார கால நடைபயணத்தை மேற்கொள்ளும் ராகுல்காந்தி வருகிற 20-ந் தேதி மத்திய பிரதேச மாநிலத்திற்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story