சிவசேனாவில் இருந்து ராம்தாஸ் கதம், ஆனந்த்ராவ் அத்சுல் நீக்கம்


சிவசேனாவில் இருந்து ராம்தாஸ் கதம், ஆனந்த்ராவ் அத்சுல் நீக்கம்
x

சிவசேனாவில் இருந்து மூத்த தலைவர்களான ராம்தாஸ் கதம், ஆனந்த்ராவ் அத்சுல் நீக்கப்பட்டனர்.

மும்பை,

சிவசேனாவில் இருந்து மூத்த தலைவர்களான ராம்தாஸ் கதம், ஆனந்த்ராவ் அத்சுல் நீக்கப்பட்டனர்.

மூத்த தலைவர்கள் நீக்கம்

சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர்களாக கருதப்படும் முன்னாள் மந்திரி ராம்தாஸ் கதம், முன்னாள் எம்.பி. ஆனந்த்ராவ் அத்சுல் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

2 பேரும் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராம்தாஸ் கதம் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியில் ஓரங்கட்டப்பட்டவர்

ரத்னகிரியை சேர்ந்த ராம்தாஸ் கதம் கடந்த பா.ஜனதா - சிவசேனா ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக இருந்தார். எனினும் கடந்த முறை அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. மேலும் அவருக்கு எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக கூறப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்தார். அப்போது அவர் சாகும் வரை சிவசேனாவில் இருந்து செல்ல மாட்டேன் என கூறியிருந்தார். ஏற்கனவே ராம்தாஸ் கதமின் மகன் யோகேஷ் கதம் எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆனந்த்ராவ் அத்சுல் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story