மழையின் தீவிரம் குறைந்தது; ரெயில், பஸ் சேவை பாதிப்பு இல்லை


மழையின் தீவிரம் குறைந்தது; ரெயில், பஸ் சேவை பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 28 July 2023 7:30 PM GMT (Updated: 28 July 2023 7:30 PM GMT)

மஞ்சள் எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. ரெயில், பஸ் சேவை பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மும்பை,

மஞ்சள் எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. ரெயில், பஸ் சேவை பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரெட் அலர்ட்

மும்பையில் கடந்த சில தினங்களாக மழை கொட்டித் தீர்த்து வந்தது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக மாட்டுங்கா, டி.என் நகர், பைகுல்லா, டிராம்பே ஆசாத் மைதானம், காந்திவிலி, கல்பாதேவி, ஓஷிவாரா, தகிசர், மகாதானே ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான இடங்களில் வெள்ளநீரை அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது.

மழையின் தீவிரம் குறைந்தது

இந்தநிலையில் நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மஞ்சள் எச்சரிக்கை என்பது பாதிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு மழை பொழிவை தருவது ஆகும். அதன்படி நேற்று மழையின் தீவிரம் குறைந்து விட்டது. இதன் காரணமாக நகர்புறத்தில் வெள்ள நீர் எங்கும் தேங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நவிமும்பை உரண் பாட்டா பகுதியில் ரசாயன டேங்கர் லாரி கவிழ்ந்ததால் சயான்-பன்வெல் நெடுஞ்சாலையில் நேற்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையின் காரணமாக மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் எந்தவித பாதிப்பின்றி ஓடியது. ஆனால் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை 15 நிமிடம் காலதாமதமாக இயக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இருப்பினும் பெரிய அளவில் ரெயில், பஸ் சேவை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

பள்ளிகள் திறப்பு

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் 9 செ.மீ, மேற்கு புறநகர் பகுதியில் 13 செ.மீ. அளவும், மும்பை நகர் பகுதியில் 10 மி.மீ. மழை அளவும் பதிவாகி உள்ளது. அரபிக்கடலில் காலை 8 மணி மற்றும் மாலை 3.20 மணி அளவில் 3.46 மீட்டர் உயரத்திற்கு அலை எழுந்தது. மும்பையில் மஞ்சள் எச்சரிக்கையால் மழையின் தீவிரம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பள்ளிகள் விடுமுறை தொடர்பாக போலி தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என மும்பை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்து இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்த நீர் இருப்பு நேற்று காலை 68 சதவீதம் எட்டியது. இதுவரையில் 4 ஏரிகள் முற்றிலும் நிரம்பி உள்ளது.



Next Story