ஹெல்மெட் சோதனையில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் படுகாயம்- வாலிபர் கைது
ஹெல்மெட் சோதனையின்போது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் படுகாயமடைந்தார். வாலிபர் ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை வடலா ரெயில் நிலையம் ஆர்.ஏ.கே. மார்க் பகுதியில் சம்பவத்தன்று போலீசார் வழக்கமான வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் போக்குவரத்து போலீஸ்காரரான தாலே என்பவர் இருந்தார். மாலை 4.45 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததை கண்டு வழிமறித்தார்.
மேலும் ஓட்டுநர் உரிமம், காப்பீடு சான்றிதழ் ஆகியவற்றை காட்டும்படி வாலிபரிடம் கேட்டார். அப்போது வாலிபரிடம் சான்றிதழ் எதுவும் இல்லாததால் அவரிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தினார்.
மேலும் போலீஸ்காரர் தாலே மீது மோதிவிட்டு தப்பி செல்ல முயன்றார். இந்த சம்பவத்தில் அவர் காயமடைந்தார். இதனை கண்ட மற்ற போலீசார் விரைந்து சென்று வாலிபரை விரட்டி பிடித்தனர். காயமடைந்த போலீஸ்காரர் தாலேவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கைதானவர் வடலா சங்கம்நகரை சேர்ந்த முகமது சலீம் சேக் (வயது 19) என்பது தெரியவந்தது.