மகாத்மா காந்தியை அவமதித்து பேசிய சம்பாஜி பிடே மீது போலீசில் புகார்; துஷார் காந்தி அளித்தார்


மகாத்மா காந்தியை அவமதித்து பேசிய சம்பாஜி பிடே மீது போலீசில் புகார்; துஷார் காந்தி அளித்தார்
x
தினத்தந்தி 11 Aug 2023 2:00 AM IST (Updated: 11 Aug 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியை அவமதித்து பேசிய சம்பாஜி பிடே மீது புனே போலீசில் துஷார் காந்தி புகார் அளித்தார்.

மும்பை,

மகாத்மா காந்தியை அவமதித்து பேசிய சம்பாஜி பிடே மீது புனே போலீசில் துஷார் காந்தி புகார் அளித்தார்.

போலீசில் புகார்

ஸ்ரீ சிவ் பிரதிஷ்கான் இந்துஸ்தான் அமைப்பின் நிறுவனர் சம்பாஜி பிடே. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் அமராவதி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் அவர் மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி நேற்று புனே டெக்கான் ஜிம்கானா போலீஸ் நிலையத்துக்கு தனது வக்கீலுடன் சென்று சம்பாஜி பிடே மீது புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய சம்பாஜி பிடே மீது இந்திய தண்டனை சட்டத்தின் 499 (அவதூறு), 153 ஏ (வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல்), 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.

மந்திரி நடவடிக்கை எடுக்கவில்லை

பின்னர் நிருபர்களிடம் பேசிய துஷார் காந்தி, "சம்பாஜி பிடே மகாத்மா காந்தியை மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரை பற்றியும் தரக்குறைவாக பேசி உள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உள்துறை மந்திரி உறுதி அளித்து இருந்தார். ஆனால் இதுவரை எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் நான் போலீஸ் நிலையம் வந்து சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளித்து உள்ளேன்" என்றார். இதுபற்றி டெக்கான் ஜிம்கானா போலீஸ் நிலைய அதிகாரியிடம் கேட்டதற்கு, "துஷார் காந்தி அளித்த புகாரை பெற்றுக்கொண்டு உள்ளோம். அந்த புகாரை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார். இதற்கிடையே கடந்த 7-ந் தேதி நவிமும்பையில் உள்ள பன்வெல் பகுதியை சேர்ந்த வக்கீல் அமித் கதர்னாவ்ரே அளித்த புகாரின் பேரில், கவுதம புத்தர், ஜோதிபா புலே மற்றும் பெரியார் ஆகியோரை இழிவுப்படுத்தி பேசியதாக சம்பாஜி பிடே மீது நியூபன்வெல் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story