நேர கட்டுப்பாட்டை மீறி மும்பையில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசு வெடித்த மக்கள்


நேர கட்டுப்பாட்டை மீறி மும்பையில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசு வெடித்த மக்கள்
x
தினத்தந்தி 25 Oct 2022 6:45 PM GMT (Updated: 25 Oct 2022 6:45 PM GMT)

மும்பையில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசு வெடிக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

மும்பை,

மும்பையில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசு வெடிக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

நேர கட்டுபாடு

தீபாவளியையொட்டி காற்று மாசு அதிகம் உள்ள டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதேபோல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மும்பையை பொறுத்தவரை இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த கட்டுப்பாடு பின்பற்றப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் நள்ளிரவு வரை பட்டாசு வெடித்தனர்.

நள்ளிரவிலும் பட்டாசு

இந்தநிலையில் மும்பையில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசு வெடிக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:-

மும்பையில் இரவு 11.45 மணிக்கு பிறகும் பட்டாசு வெடிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள இடங்களில் கூட பட்டாசு வெடிக்கப்பட்டது. மெரின் டிரைவ், சிவாஜி பார்க்கில் மக்கள் கூட்டமாக பட்டாசு வெடித்தனர். ஜூகு, பாந்திரா, ஒர்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து பொதுமக்கள் இதுகுறித்து எங்களிடம் புகார் அளித்தனர். டுவிட்டரிலும் பலர் போலீசில் புகார் அளித்தனர். கோர்ட்டு உத்தரவுபடி இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும்.

இதேபோல மும்பையில் இந்த தீபாவளியின் போது 109.1 டெசிபில் சத்தம் வரை பட்டாசு வெடிக்கப்பட்டது. இது கடந்த 2020, 2019 ஆண்டைவிட அதிகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story