பங்கஜா முண்டே பா.ஜனதாவில் இருந்து செல்ல மாட்டார்- மாநில தலைவர் திட்டவட்டம்
பங்கஜா முண்டே பா.ஜனதாவில் இருந்து செல்ல மாட்டார் என கட்சியின் மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.
மும்பை,
பங்கஜா முண்டே பா.ஜனதாவில் இருந்து செல்ல மாட்டார் என கட்சியின் மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரசுக்கு தாவல்?
மராட்டியத்தில் பா.ஜனதாவின் பலம் வாய்ந்த தலைவராக இருந்தவர் கோபிநாத் முண்டே. இவர் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய மந்திரியாக பதவியேற்ற சில நாட்களில் டெல்லியில் நடந்த சாலை விபத்தில் பலியானார். இவரது மறைவுக்கு பிறகு அவரது மகள் பங்கஜா முண்டே தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக 2014-ல் பா.ஜனதா மராட்டியத்தில் ஆட்சிக்கு வந்த போது முதல்-மந்திரி போட்டியில் இருந்தார். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆன பிறகு, அவருக்கு பங்கஜா முண்டேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சட்டசபை தேர்தலில் பங்கஜா முண்டே தோல்வி அடைந்தார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தற்போது தேசிய பொறுப்பில் உள்ளார்.
இந்தநிலையில் பங்கஜா முண்டே பா.ஜனதாவில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரசில் சேர வாய்ப்பு உள்ளதாக அந்த கட்சியை சேர்ந்த அமோல் மித்காரி கூறினார்.
ரத்தத்தில் பா.ஜனதா
அமோல் மித்காரியின் இந்த கருத்து குறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:-
பங்கஜா முண்டேவின் ரத்தத்தில் பா.ஜனதா கலந்து உள்ளது. அவர் மாநில தலைவர் மட்டுமல்ல, தேசிய தலைவர். மத்திய பிரதேச பா.ஜனதாவின் இணை பொறுப்பாளராக உள்ளார். அவர் கட்சியை விட்டு செல்லமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல தாதரில் தசரா பொதுக்கூட்டம் நடத்த தடைகள் ஏற்படுத்தப்படுவதாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி தெரிவித்து உள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, தசரா பொதுக்கூட்டம் தொடர்பாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.