கட்சி மீது அதிருப்தி இல்லை- பங்கஜா முண்டே பேச்சு

கட்சி மீது அதிருப்தி இல்லை. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குவேன் என பங்கஜா முண்டே கூறியுள்ளார்.
அவுரங்காபாத்,
கட்சி மீது அதிருப்தி இல்லை. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குவேன் என பங்கஜா முண்டே கூறியுள்ளார்.
தசரா பொதுக்கூட்டம்
பா.ஜனதா மூத்த தலைவர் மறைந்த கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. இவர் கடந்த பா.ஜனதா ஆட்சி காலத்தில் மந்திரி பதவி வகித்தார். ஆனால் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவருக்கு கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அவர் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்பட்டது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியிலும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
இதனால் அவர் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் நேற்று பீட் மாவட்டத்தில் உள்ள சவர்கான் காட் என்ற இடத்தில் பங்கஜா முண்டே வழக்கமாக நடத்தும் தசரா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-
அதிருப்தியில் இல்லை...
போராட்டம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பகுதியாகும், சத்ரபதி சிவாஜி மகாராஜா கூட போராட வேண்டி இருந்தது. மறைந்த கோபிநாத் முண்டே தனது முழு அரசியல் வாழ்க்கையிலும் போராட வேண்டி இருந்தது.
மத்திய மந்திரி அமித்ஷாவும், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டவும் எனது முந்தைய தசரா பேரணியின்போது இங்கிருந்த கூட்டத்தை காட்டி, இந்த மக்களுக்காக உழைக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
தங்களுக்கு பிடித்த தலைவர்கள் ஏதாவது பதவியை பெறவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. கட்சியில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நான் எந்த பதவியையும் வகிக்கவில்லை.
ஆனால் கட்சி அமைப்பு யாரையும் விட மேலானது. பதவி கிடைக்காததால் நான் யாரிடமும் அதிருப்தியில் இல்லை. கட்சி எனக்கு மீண்டும் பார்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குவேன். நான் என்னால் இயன்ற அளவுக்கு எண்ணை மாற்றிக்கொண்டேன். இப்போது நான் மாறவேண்டும் என்று விரும்புபவர்களின் நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.