ஆனந்த சதுர்த்தியையொட்டி மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் நள்ளிரவில் சிறப்பு ரெயில்கள்
ஆனந்த சதுர்த்தியையொட்டி மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேயில் நள்ளிரவு முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
மும்பை,
ஆனந்த சதுர்த்தியையொட்டி மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேயில் நள்ளிரவு முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
ஆனந்த சதுர்த்தி
கடந்த 2 ஆண்டாக களை இழந்து காணப்பட்ட விநாயகர் சதுர்த்தி தின கொண்டாட்டம் நடப்பு ஆண்டில் கடந்த 31-ந் தேதி முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முக்கிய நிகழ்வான ஆனந்த சதுர்த்தி தின கொண்டாட்டமான சிலை கரைப்பு தினத்தில் இந்த நிகழ்வை காண புறநகர் மற்றும் மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
இதனையொட்டி மத்திய ரெயில்வே வழித்தடத்தில் 9-ந்தேதி நள்ளிரவு முதல் 10-ந்தேதி அதிகாலை வரையில் மின்சார ரெயில் சேவை இயக்க முடிவு செய்து உள்ளது.
10 சிறப்பு ரெயில்கள்
இது தொடர்பாக மத்திய ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில், "ஆனந்த சதுர்த்தி தினத்தையொட்டி மத்திய ரெயில்வேயில் 10 சிறப்பு ரெயில்கள் கல்யாண், தானே, பன்வெல் ஆகிய ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி ரெயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. இதன்படி கல்யாணில் இருந்து நள்ளிரவு 12.05 மணி, தானேயில் 1.00 மற்றும் 2.00 மணி, பன்வெலில் இருந்து 1 மணி மற்றும் 1.45 மணி அளவில் மும்பை சி.எஸ்.எம்.டி ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படும்.
இதே போல மறுமார்க்கமாக சி.எஸ்.எம்.டியில் இருந்து அதிகாலை 1.40 மணி, 3.25 மணி அளவில் கல்யாணிற்கும், 2.30 மணி அளவில் தானேவிற்கும், 1.30 மணி மற்றும் 2.45 மணி அளவில் பன்வெலுக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு ரெயில்வே
இதேபோல மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக செய்தி தொடர்பாளர் சுமித் தாக்குர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆனந்த சதுர்த்தியை யொட்டி மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்னி ரோடு ரெயில் நிலையத்தில் பெருமளவு பயணிகள் இறங்கி செல்கின்றனர். அந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் குறுகிய அளவு கொண்டதால் கூட்ட நெரிசல் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சர்ச்கேட் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் சர்னிரோடு ரெயில் நிலையத்தில் நிற்காமல் அடுத்த ரெயில் நிலையமான மெரின்லைனில் நின்று செல்லும்.
இதைத்தவிர அன்றைய தினத்தில் விராரில் இருந்து நள்ளிரவு 12.15 மணி, 12.45 மணி, 1.40 மணி, 3.00 மணி அளவில் சர்ச்கேட் நோக்கி இயக்கப்படும். இதே போல மறுமார்க்கமாக சர்ச்கேட்டில் இருந்து விரார் நோக்கி நள்ளிரவு 1.15 மணி, 1.55 மணி, 2.25 மணி, 3.20 மணி அளவில் விரார் நோக்கி இயக்கப்படும்.
இந்த ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.