சாலைகள், தெருக்கள் சுத்தமாக உள்ளதா என அதிகாரிகள் தினமும் 2 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் - மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
மும்பையில் சாலைகள், தெருக்கள் சுத்தமாக உள்ளதா என அதிகாரிகள் தினந்தோறும் 2 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் என கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டார்.
மும்பை,
மும்பையில் சாலைகள், தெருக்கள் சுத்தமாக உள்ளதா என அதிகாரிகள் தினந்தோறும் 2 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் என கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டார்.
ஏக்நாத் ஷிண்டே கண்டிப்பு
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் மஜ்காவ் டாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பிய போது, பல இடங்கள் குப்பை குவிந்து அசுத்தமாக இருப்பதை கவனித்தார். உடனடியாக அவர் இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகாலை கண்டித்தார். அவர் மும்பையில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி, சிறிய தெருக்கள் கூட சுத்தமாக இருப்பதை உறுதி செய்யுமாறும் கமிஷனருக்கு உத்தரவிட்டார். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். முதல்-மந்திரியின் உத்தரவை அடுத்து மஜ்காவ் பகுதியை உள்ளடக்கிய மாநகராட்சி இ-வார்டு உதவி கமிஷனர் அஜய்குமார் யாதவ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆய்வு செய்ய உத்தரவு
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் 2 மணி நேரம் சாலைகள் சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாநகராட்சி இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், திடக்கழிவு மேலாண்மை துறை அதிகாரிகள், ஊழியர்கள் தினந்தோறும் காலை, மாலை தலா ஒரு மணி நேரம் சாலைகள், தெருக்கள் சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இதேபோல சாலைகள் மட்டுமின்றி பொதுக்கழிவறைகளும் நாளுக்கு 2 முறை சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இக்பால் சகால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நகரில் உள்ள சட்டவிரோத பேனர், போஸ்டர், விளம்பர பதாகைகளையும் அகற்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.