மண்ணில் புதைந்த யாராலும் வெளியே வர முடியவில்லை; நிலச்சரிவை நேரில் பார்த்தவர் உருக்கம்


மண்ணில் புதைந்த யாராலும் வெளியே வர முடியவில்லை; நிலச்சரிவை நேரில் பார்த்தவர் உருக்கம்
x
தினத்தந்தி 20 July 2023 7:00 PM GMT (Updated: 20 July 2023 7:01 PM GMT)

நிலச்சரிவில் மண்ணில் புதைந்த யாராலும் வெளியே வர முடியவில்லை என நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர் உருக்கமாக கூறினார்.

மும்பை,

நிலச்சரிவில் மண்ணில் புதைந்த யாராலும் வெளியே வர முடியவில்லை என நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர் உருக்கமாக கூறினார்.

ராய்காட் மாவட்டம் இர்சல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இந்தநிலையில் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் உருக்கமாக கூறியதாவது:-

பயங்கர சத்தம் கேட்டது

மழைக்காலம் என்பதால் நாங்கள் வீட்டில் தூங்காமல் அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் தான் தூங்குவோம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல பள்ளி அறையில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தேன். இரவு 10.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. என்னை காப்பாற்றி கொள்ள பள்ளியில் இருந்து வெளியே ஓடினேன். அப்போது தான் நிலச்சரிவு ஏற்பட்டு எனது வீடு சேதமடைந்து இருந்ததை பார்த்தேன். எனது பெற்றோர் மண்ணில் புதைந்துவிட்டனர். தற்போது எனது வீட்டில் மண்ணும், சகதியையும் தவிர எதுவுமில்லை. மண்ணில் புதைந்த யாராலும் வெளியே வர முடியவில்லை. சம்பவம் குறித்து ஆசிரம பள்ளியில் தங்கி படிக்கும் எனது தம்பியிடம் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

25 குழந்தைகள் இருந்தனர்

கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக இருக்கும் பெண் ஒருவர் கூறுகையில், "நான் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு செல்வேன். மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் 45 வீடுகள் இருக்கும். இதில் 43 வீடுகள் சேதமடைந்து உள்ளது. அங்கு 6 வயதுக்குட்பட்ட 25 குழந்தைகள் உள்பட 229 பேர் இருந்தனர்" என்றார். இதேபோல பக்கத்து ஊரில் இருந்து வந்த மூதாட்டி ஒருவர், அவரின் குடும்பத்தினர் 5 பேர் மண்ணில் புதைந்துவிட்டதாக கண்ணீருடன் கூறினார்.



Next Story