தாஜ் ஓட்டல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்- 3 பேர் கைது


தாஜ் ஓட்டல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்- 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2023 12:30 AM IST (Updated: 15 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தாஜ்மகால் ஓட்டல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தாஜ் ஓட்டல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

3 பேர் கைது

தென்மும்பை கொலாபா பகுதியில் பிரபல ஐந்து நட்சத்திர தாஜ் ஓட்டல் அருகே நேற்று சாலையில் போலீசார் வழக்கமான வாகன சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை வழிமறித்தனர். ஆனால் கார் டிரைவர் நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக ஓட்டி சென்றார். இதனை கண்ட போலீசார் தப்பி சென்ற காரை விரட்டி சென்றனர். கொலாபா அருகே காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ராஜ்கமல் தேலர், சூரஜ் கணேஷ் மாத்ரே, ஜஸ்பால் சிங் என தெரியவந்தது.

ஆயுதங்கள் பறிமுதல்

காரில் சோதனை போட்ட போலீசார் அங்கு அரிவாள்கள், வாள், பட்டாகத்தி, இரும்பு கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பயங்கர ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். ஆயுதங்களை காரில் கடத்தி குற்ற செயல்களில் ஈடுபட முயன்றனரா? அல்லது ஆயுத கடத்தல் கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story