மும்பையில் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் மோசமான நிலையில் உள்ளன; ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு


மும்பையில் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் மோசமான நிலையில் உள்ளன; ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Aug 2023 7:00 PM GMT (Updated: 29 Aug 2023 7:00 PM GMT)

மும்பையில் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் மோசமான நிலையில் இருப்பதாக ஆதித்ய தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை,

மும்பையில் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் மோசமான நிலையில் இருப்பதாக ஆதித்ய தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.

மோசமான நிலையில் ஆஸ்பத்திரிகள்

தானேயில் உள்ள கல்வா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சமீபத்தில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கல்வா மாநகராட்சி ஆஸ்பத்திரியை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வசதிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல மும்பை கே.இ.எம். ஆஸ்பத்திரியிலும் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டார். இந்தநிலையில் மும்பையில் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் அடிப்படை வசதி இல்லாமல் மோசமான நிலையில் செயல்படுவதாக முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.

மருந்து, மாத்திரைகள் இல்லை

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் தொடர்பாக டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் என்னிடம் தகவல் கூறிவருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் ஆதரவு இல்லாததால் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள் பொதுமக்களுக்கு சேவை அளிக்க முடியாத மோசமான நிலைக்கு சென்று உள்ளன. பொதுவெளியில் தெரிவித்தால் மட்டுமே மும்பை மாநகராட்சியிடம் இருந்து பதில் கிடைக்கிறது. சயான் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், பணியாளர்கள் மருத்துவ சேவை வழங்க ஓய்வின்றி கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் அங்கு அடிப்படை மருந்து, மாத்திரைகள், கையுறைகள், எக்ஸ்-ரே பிலிம் போன்றவை கூட இல்லாமல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதுவரை அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஒரு ஆண்டாக காண்டிராக்டர் மந்திரி (முதல்-மந்திரி) அலுவலகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அது பொதுமக்களுக்கு வேலை செய்யாமல், கட்டுமான அதிபர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு சேவை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story