தலோஜாவில் ஸ்கூட்டர் மீது டெம்போ மோதி தாய்-மகள் பலி- கணவர் படுகாயம்


தலோஜாவில் ஸ்கூட்டர் மீது டெம்போ மோதி தாய்-மகள் பலி- கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Sept 2022 3:15 AM IST (Updated: 29 Sept 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

தலோஜாவில் ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது 2 வயது மகள் உயிரிழந்தனர். உடன் சென்ற கணவர் படுகாயமடைந்தார்.

மும்பை,

தலோஜாவில் ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது 2 வயது மகள் உயிரிழந்தனர். உடன் சென்ற கணவர் படுகாயமடைந்தார்.

ஸ்கூட்டர் மீது மோதி விபத்து

நவிமும்பை தலோஜா ரோகின்ஜான் கிராமத்தை சேர்ந்தவர் சிராஜ் (வயது27). இவரது மனைவி ரேகானா கான்(24). மகள் அடிபா (2). சிராஜ் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். மும்பை டிராம்பேவில் வசிக்கும் மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் ஸ்கூட்டரில் சென்றிருந்தார்.

இரவு 10 மணி அளவில் அங்கிருந்து தலோஜா நோக்கி வந்தார். அவரது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வந்த போது சாலையில் வேகமாக வந்த டெம்போ ஒன்று ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

தாய்-மகள் பலி

இதனை கண்ட செம்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் விபத்து ஏற்படுத்திய டெம்போவின் பதிவெண்ணை கண்டறிந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி உள்பட 3 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் ரேகானா கான் மற்றும் மகள் அடிபா உயிரிழந்தது தெரியவந்தது. சிராஜ்விற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் கைது

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ரேகானா கான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற டெம்போ டிரைவரை பிடிக்க பதிவெண் மூலம் விசாரணை நடத்தினர்.

இதில் கானு தாராசாந்த் தாஸ் (வயது39) என்பவர் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story