மராத்தா இடஒதுக்கீடு குறித்த விமர்சனம் மந்திரி தானாஜி சாவந்த் மன்னிப்பு கேட்டார்
மராத்தா இடஒதுக்கீடு குறித்த தனது விமர்சனத்திற்காக மந்திரி தானாஜி சாவந்த் மன்னிப்பு கோரினார்.
மும்பை,
மராத்தா இடஒதுக்கீடு குறித்த தனது விமர்சனத்திற்காக மந்திரி தானாஜி சாவந்த் மன்னிப்பு கோரினார்.
மராத்தா சமுதாயம் கோரிக்கை
மராத்தா சமுதாயத்தினர் நீண்டகால கோரிக்கையான கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு கடந்த பா.ஜனதா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் இந்த இடஒதுக்கீடு 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
இந்த நிலையில் மராத்தா சமுதாயத்தினர் சமீபத்தில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத்துறை மந்திரி தானாஜி சாவந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இடஒதுக்கீடு அரிப்பு
இவர் அந்த கூட்டத்தில், "மராத்தா இடஒதுக்கீடுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக அதை பற்றிய எந்த பிரச்சினையும் எழவில்லை. இப்போது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இடஒதுக்கீட்டிற்கான 'அரிப்பு' மீண்டும் தொடங்கி உள்ளது. எனக்கும் இந்த ஒதுக்கீடு வேண்டும், எனது அடுத்த தலைமுறைக்கும் இது வேண்டும்.
எங்கள் தலைவர்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் எங்கள் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீட்டை உறுதி செய்வார்கள். இடஒதுக்கீடு வழங்கப்படும் வரை அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மன்னிப்பு
இந்த நிலையில் அவரது பேச்சுக்கு மராத்தா சமுதாய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மராத்தா அமைப்பு தலைவர் வினோத் பாட்டீல் கூறுகையில், "தானாஜி சாவந்திற்கு அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும். இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மந்திரியுமான தனஞ்செய் முண்டே, "இதுபோன்ற மோசமான பேச்சிற்காக தானாஜி சாவந்தின் மந்திரி பதவியை மக்கள் நிரந்தரமாக பறிப்பார்கள்" என்றார்
இதேபோல சிவசேனா மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே, காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆகியோரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மந்திரி தானாஜி சாவந்த் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறுகையில், "மராத்தா சமுதாயத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.