டோம்பிவிலியில் தொழிலாளியை அடித்து கொன்று உடல் எரிப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
டோம்பிவிலியில் தொழிலாளியை அடித்து கொன்று உடலை எரித்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தானே,
டோம்பிவிலியில் தொழிலாளியை அடித்து கொன்று உடலை எரித்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொழிலாளி மீது தாக்குதல்
தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்தவர் சந்தோஷ் சுதாம் (வயது45). இவர் நிதின் பாட்டீல் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி நிதின் பாட்டீல் தான் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றை சந்தோஷ் சுதாமிடம் கொடுத்து வீட்டில் பத்திரமான இடத்தில் வைக்குமாறு தெரிவித்தார். சில நாட்கள் கழித்து துப்பாக்கியை எடுத்து தருமாறு கூறினார். ஆனால் சந்தோஷ் சுதாமிற்கு துப்பாக்கியை வைத்த இடம் மறந்து போனதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிதின் பாட்டீல், கூட்டாளி அபிசேக் பிரதீப், விஜய் கண்பத் ஆகியோர் சேர்ந்து அவரது மகன், பாட்டியின் கண் முன்பே சந்தோஷ் சுதாமை பலமாக தாக்கினர்.
உடல் தகனம்
படுகாயமடைந்த சந்தோஷ் சுதாமை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் நிதின் பாட்டீல் உள்பட 3 பேர் சேர்ந்து குடும்பத்தினர் விருப்பத்திற்கு மாறாக சந்தோஷ் சுதாமின் உடலை தகனம் செய்தனர். பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை 3 பேரும் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து சந்தோஷ் சுதாமின் குடும்பத்தினர் அவர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.