கடத்தப்பட்ட சிறுமி 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு- குழந்தை இல்லாத தம்பதி கைது
மும்பையில் கடத்தப்பட்ட சிறுமியை 9 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டு வேலைக்கார பெண் ஒருவரின் உதவியால் போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் குழந்தை இல்லாத தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் கடத்தப்பட்ட சிறுமியை 9 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டு வேலைக்கார பெண் ஒருவரின் உதவியால் போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் குழந்தை இல்லாத தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
காணாமல் போன சிறுமி
மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தாள். 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி சகோதரன் ரோகித்வுடன் பள்ளிக்கு சென்றாள். பள்ளி அருகே சகோதரன் ரோகித் தனக்கு பின்னால் நடந்து வந்த சிறுமியை தேடினான். சிறுமியை காணாமல் திடுக்கிட்டார். பள்ளிக்கு சென்று விசாரித்தபோது அங்கு ஆசிரியர் சிறுமி பள்ளிக்கு வராததை தெரிவித்தார்.
இதுபற்றி பெற்றோர் டி.என் நகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போஸ்டரில் காணாமல் போன சிறுமியின் புகைப்படம் அச்சிட்டு அப்பகுதியில் வினியோகம் செய்தனர்.
9 வருடங்கள் கழிந்த நிலையில் டி.என் நகர் போலீசாருக்கு காணாமல் போன சிறுமி ஜூகுவில் உள்ள வீட்டில் வசித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் விசாரணை
இதன்படி போலீசார் சிறுமி வசித்து வந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்த ஹரி டிசோசா மற்றும் அவரது மனைவி சோனியிடம் விசாரித்தனர். அவர்கள் குழந்தை இல்லாத தம்பதி என்றும், சம்பவத்தன்று சிறுமியை கடத்தி சென்றதாகவும் ஒப்புக்கொண்டனர். விசாரணையில் கடத்தப்பட்ட சிறுமியை கர்நாடகாவிற்கு அழைத்து சென்றதாகவும், சில வருடங்கள் கழித்து மும்பை ஜூகுவிற்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது.
அப்போது வீட்டு வேலை பார்த்து வந்த பிரமிளா என்ற பெண்ணிற்கு சிறுமியின் அறிமுகம் கிடைத்தது. சம்பந்தப்பட்ட தம்பதி உண்மையான பெற்றோர் இல்லை எனவும், தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் பிரமிளாவிடம் சிறுமி தெரிவித்தாள். இதனை தொடர்ந்து அவர் சிறுமியின் விவரங்களை சேகரித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் உண்மை வெளிசத்துக்கு வந்தது.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
இதையடுத்து வழக்கில் உதவியாக இருந்த பெண் பிரமிளாவை பாராட்டினர். சிறுமியை கடத்தி சென்ற தம்பதியை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 10-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமி தற்போது 16 வயது ஆன நிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 9 ஆண்டுகளுக்கு மகள் கிடைத்ததால் பெற்றோர் ஆரத்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றதுடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.