பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தவர்களை பாராட்டுவது இந்து கலாசாரமா? - சிவசேனா கேள்வி
பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தவர்களை பாராட்டுவது தான் இந்து கலாசாரமா என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தவர்களை பாராட்டுவது தான் இந்து கலாசாரமா என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
விடுதலை உத்தரவு
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின் ஏற்பட்ட கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்பவர் கும்பல் கற்பழிப்புக்கு ஆளானார். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் அவரின் 3 வயது மகளும் அடங்குவார்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு சம்பவத்தில் தொடர்புடைய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சுமார் 15 ஆண்டுகாலம் சிறையில் கழித்த அவர்களை கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதேநேரம் உள்ளூர் தலைவர்கள் சிலர் இதை பாராட்டியதாக தகவல் பரவி வருகிறது.
இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று கூறியிருப்பதாவது:-
அமைதி ஏன்?
பில்கிஷ் பானு வழக்கில் அவரின் தரப்பு நியாயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து பேசிய அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்கள் விடுதலை செய்யப்படுவது ஆச்சரியமாக உள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் அமைதியாக இருப்பது ஏன்?.
மன்னிக்க முடியாது...
கற்பழிப்பாளர்களை பாராட்டுவது தான் இந்து கலாசாரமா?
பில்கிஸ் பானு ஒரு முஸ்லிம் என்பதால், அவர் மீதான குற்றத்தை மன்னிக்க முடியாது.
இது இந்து- முஸ்லிம் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த பிரச்சினை இந்துத்வாவின் ஆன்மா மற்றும் நமது மகத்தான கலாசாரத்தின் கவுரவம் தொடர்பானது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் வரும்போது, அவர் பில்கிஸ் பானுவை சந்தித்து தனது ஆதரவை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.