மத், மார்வே பகுதிகளில் ஸ்டூடியோக்கள் அனுமதியின்றி கட்டப்பட்டது குறித்து விசாரணை- மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


மத், மார்வே பகுதிகளில் ஸ்டூடியோக்கள் அனுமதியின்றி கட்டப்பட்டது குறித்து விசாரணை- மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
x

மத், மார்வே உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மும்பை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

மத், மார்வே உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மும்பை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

கிரித் சோமையா குற்றச்சாட்டு

மத், மார்வே, எரங்கல் மற்றும் மலாடில் உள்ள கடற்கரைகள் மற்றும் ஆழகான இயற்கை சூழல்கள் சமீப காலங்களாக படப்பிடிப்புக்கு பிரபலமாகி உள்ளது.

இதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இங்கு 49 ஸ்டூடியோக்கள் வந்துள்ளன. இந்தநிலையில் வளர்ச்சி இல்லாத மண்டலம் (என்.டி.சி) மற்றும் கடலோர பாதுகாப்பு மண்டலத்தில்(சி.ஆர்.இசட்). இந்த ஸ்டூடியோக்கள் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா இந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்ததுடன் சுமார் 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கமிஷனர் உத்தரவு

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகல் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாநகராட்சி துணை கமிஷனர் ஹர்ஷல் காலே தலைமையில் இந்த விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமிஷனர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

போலி ஆவணங்கள்

மத், மார்வே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஸ்டியோக்கள் முறையான அனுமதியின்றி ஆயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவில் மும்பை மாநகராட்சி மற்றும் மராட்டிய கடலோர பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் உதவியுடன் போலி ஆவணங்கள் மூலம் கட்டப்பட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.

இங்கு தற்காலிக படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, அந்த அனுமதியின் அடிப்படையில் நிரந்தர ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி துணை கமிஷனர் ஆய்வு செய்வார்.

தற்காலிக அனுமதி

இதேபோல ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உடந்தையாக உள்ள மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இத்தகைய தற்காலிக அனுமதிகளை தவறாக பயன்படுத்தினார்களா என்பதையும், ஸ்டூடியோக்களுக்கு சட்டப்பூர்வ அனுமதிகள் உள்ளதா என்பதையும், இவை கடலோர கட்டுப்பாட்டு மண்டலம் மற்றும் வளர்ச்சி இல்லாத மண்டலங்களிலும் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story