மணிப்பூர் போன்ற சம்பவம் நடந்தால் வீதியில் இறங்கி போராட வேண்டும்; கட்சியின் மகளிர் அணிக்கு, சரத்பவார் வலியுறுத்தல்


மணிப்பூர் போன்ற சம்பவம் நடந்தால் வீதியில் இறங்கி போராட வேண்டும்; கட்சியின் மகளிர் அணிக்கு, சரத்பவார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2023 1:00 AM IST (Updated: 12 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் போன்ற சம்பவம் நடந்தால் வீதியில் இறங்கி போராட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் மகளிர் அணியினரை சரத்பவார் வலியுறுத்தினார்.

மும்பை,

மணிப்பூர் போன்ற சம்பவம் நடந்தால் வீதியில் இறங்கி போராட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் மகளிர் அணியினரை சரத்பவார் வலியுறுத்தினார்.

மணிப்பூர் முன்உதாரணம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த கட்சியின் மகளிர் அணியினர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு மணிப்பூர் சம்பவம் முன் உதாரணமாக உள்ளது. பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டனர். தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகினர். மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதுபோன்ற ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி இதை எதிர்த்து தெருவில் இறங்கி போராட வேண்டும். இதற்காக அவர்கள் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வார்கள். ஆனால் அதுகுறித்து நீங்கள் கவலைப்பட கூடாது.

ராணுவ மந்திரி

குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு வழங்கும் அரசின் முடிவை முந்தைய அரசு முறையாக செயல்படுத்தவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நிலத்தின் ஆவணத்தில் மகன் மற்றும் மகள்களின் பெயர்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதை சில இடங்களில் அமல்படுத்தினோம். ஆனால் 100 சதவீதம் செய்ய முடியவில்லை. இதை முழுமையாக செயல்படுத்த அரசிடம் வலியுறுத்த வேண்டும். நான் ராணுவ மந்திரியாக இருந்த போதே பல்வேறு தயக்கங்களை மீறி ராணுவத்தின் 3 படைகளிலும் பெண்களுக்கு 11 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தேன்.

ஒப்பந்த வேலை

சிவசேனா- பா.ஜனதா- அஜித்பவார் கூட்டணி ஆட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதங்களுக்கு இடையே 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக அனில் தேஷ்முக் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினார். அரசில் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால் அவை நிரப்பப்படவில்லை. ஒப்பந்த பணியாளர்களை பணி நியமனம் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது. இது இடஒதுக்கீட்டின் கீழ் வேலைக்கு சேர தகுதியுள்ள ஏழை மக்களின் வாய்ப்பை பறிக்ககூடியதாகும் இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்க அனுமதிக்கும் அரசின் கொள்கையையும் கடுமையாக சாடினார்.


Next Story