கடைசி மூச்சு வரை தேசியவாத காங்கிரசில் தான் இருப்பேன்- அஜித்பவார் பேச்சு
கடைசி மூச்சு வரை தேசியவாத காங்கிரசில் தான் இருப்பேன் என அஜித்பவார் கூறியுள்ளார்.
புனே,
கடைசி மூச்சு வரை தேசியவாத காங்கிரசில் தான் இருப்பேன் என அஜித்பவார் கூறியுள்ளார்.
என்னை சுற்றி சந்தேக வளையம்
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அஜித்பவார் நேற்று புனேயில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
என்னை பற்றி பல தகவல்களும், வதந்திகளும் பரவி வருகிறது. காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது. ஆனால் வதந்திகளுக்கு இடம்கொடுக்காமல் நான் எனது வேலையை தொடர்ந்து வருகிறேன்.
கடைசி மூச்சு வரை..
உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும். அதிகாலையில் நடந்ததை (பட்னாவிசுடன் துணை முதல்-மந்திரி ஏற்ற சம்பவம்) மீண்டும் நான் செய்வேனா என்ற கேள்வி உங்களுக்கும் எழுந்து இருக்கும். நான் ஏற்கனவே கூறிவிட்டேன். கடைசி மூச்சு உள்ளவரை தேசியவாத காங்கிரசுக்காக தான் உழைப்பேன் என்பதை கூறிவிட்டேன். கட்சி எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன். மக்கள் நலம், வளர்ச்சிக்காக உழைப்பது தான் எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே தாராசிவ் மாவட்டத்தில் கிராஸ்ரோடு பகுதியில் அஜித்பவார் வருங்கால முதல்-மந்திரி என புகழ்ந்து வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.