வீடு, வாகன, தனிநபர் கடன்கள் பெற்றவர்கள் நிம்மதி; வங்கிக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்), மாற்றம் இன்றி 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பை,
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்), மாற்றம் இன்றி 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ ரேட்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 2 மாதங்களுக்கு ஒருதடவை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு மே மாதம் ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டது. அதில் இருந்து 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதனால், தற்போது ரெப்போ ரேட் 6.5 சதவீதமாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ரெப்போ ரேட் உயர்த்தப்படாமல் 6.5 சதவீதமாக நீடித்து வருகிறது.
6.5 சதவீதமாக நீடிக்கும்
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. அதில், ரெப்போ ரேட் விகிதத்தை மாற்றம் எதுவுமின்றி 6.5 சதவீதமாக தொடர ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இத்தகவலை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- ரெப்போ ரேட் விகிதம், 6.5 சதவீதமாக நீடிக்கும். தொடர்ந்து 3-வது தடவையாக ரெப்போ ரேட் விகிதம் மாற்றமின்றி நீடிக்கிறது.
பணவீக்கம்
தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இருப்பினும், வரத்து அதிகரிக்கும்போது தக்காளி விலை குைறய தொடங்கும். அப்படியும் பணவீக்கம் அதிகரித்தபடி சென்றால், ரிசர்வ் வங்கி தரப்பில் கடுமையான கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். நடப்பு 2023-2024 நிதிஆண்டில், பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என்று ஏற்கனவே கணித்து இருந்தோம். தற்போது, இந்த கணிப்பை சற்று அதிகரித்து, 5.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளோம்.
பொருளாதார வளர்ச்சி
அதே சமயத்தில், நடப்பு நிதிஆண்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பில் மாற்றம் இ்ல்லை. பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து எழுச்சி காணப்படுகிறது. அவ்வப்போது, ரெப்போ ரேட் உயர்த்தப்படுவதால், வீட்டுக்கடன் உள்பட பல்வேறு கடன்களை பெற்றவர்கள் அவதிப்பட வேண்டி இருக்கிறது. அவர்கள் மாறுபடும் (புளோட்டிங்) வட்டி விகிதத்தில் இருந்து நிலையான (பிக்சட்) வட்டி விகிதத்துக்கு மாறிக்கொள்ளும் நடைமுறை, விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
தவணை உயராது
நிலையான வட்டி விகிதத்தில் இ.எம்.ஐ. தொகை, கடன் கால அளவு போன்ற விவரங்கள், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே கடன்களை அடைக்கலாம். 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதால், வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ரெப்போ ரேட் விகிதம் மாற்றப்படாததால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான மாத தவணை தொகை உயராது. இதனால் அந்த கடன் பெற்றவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.