சட்டவிரோத கட்டிடங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
தானேயில் உள்ள 9 சட்டவிரோத கட்டிடங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற தடைவிதிக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்து உள்ளது.
மும்பை,
தானேயில் உள்ள 9 சட்டவிரோத கட்டிடங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற தடைவிதிக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்து உள்ளது.
பொதுநலன் மனு
தானேயை சேர்ந்த 3 பேர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில் மும்ரா பகுதியில் உள்ள 9 சட்டவிரோத கட்டிடங்களில் பல குடும்பங்கள் வசித்து வருவதாக கூறியிருந்தனர். மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோத கட்டிடங்களின் மின், குடிநீர் இணைப்பை துண்டித்த போதும், குடியிருப்புவாசிகள் சட்டவிரோதமாக குடிநீர், மின் இணைப்பு பெற்று தொடர்ந்து அங்கு வசித்து வருவதாக கூறினர்.
அபாய நிலையில் உள்ள அந்த கட்டிடங்கள் இடிந்து உயிர் சேதங்கள் ஏற்படும் முன் அங்கு இருப்பவர்களை வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். மேலும் 9 சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபான்கர் தத்தா, நீதிபதி கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
இதில் நேற்று சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க 2019, 2021-ம் ஆண்டு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியதை தானே மாநகராட்சி அதிகாரி ஐகோர்ட்டில் உறுதிப்படுத்தினார். இதையடுத்து ஆஜரான குடியிருப்புவாசிகள் தரப்பு வக்கீல், சட்டவிரோத கட்டிடங்களில் இருந்து வெளியேற குடியிருப்புவாசிகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
தடை விதிக்க மறுப்பு
எனினும் ஐகோர்ட்டு சட்டவிரோத கட்டிடங்களில் இருந்து குடியிருப்புவாசிகளை வெளியேற்ற தடை விதிக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள், " உங்களின் பாதுகாப்புக்காகவே கடந்த வாரமே கட்டிடங்களில் இருந்து நீங்களே வெளியேறுமாறு கூறினோம். எங்களை பொறுத்தவரை எல்லா குடியிருப்புவாசிகளின் உயிரும் விலைமதிப்பற்றது. நீங்கள் எல்லோரும் கண்ணியமாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். எப்போதும் அபாய நிலையில் வாழக்கூடாது. மழை பெய்யும் போது எந்த நேரத்திலும் கட்டிடங்கள் சீட்டு கட்டுபோல சரியலாம் " என கூறினர்.
மேலும் 9 கட்டிடங்களில் வசித்து வருபவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய தானே மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.