'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில் பால்கர், ராய்காட் மாவட்டங்களில் கனமழை - தானேயிலும் கொட்டித்தீர்த்தது


ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பால்கர், ராய்காட் மாவட்டங்களில் கனமழை - தானேயிலும் கொட்டித்தீர்த்தது
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 19 July 2023 6:46 PM GMT)

ரெட் அலர்ட் காரணமாக பால்கர், ராய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தானேயிலும் மழை கொட்டித்தீர்த்தது.

மும்பை,

ரெட் அலர்ட் காரணமாக பால்கர், ராய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தானேயிலும் மழை கொட்டித்தீர்த்தது.

ரெட் அலர்ட்

மராட்டியத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. ராய்காட், பால்கர் மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. பால்கர் மாவட்டம் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை, தானே கோட்பந்தர் சாலை போன்ற இடங்களில் வெள்ளம் தேங்கியதால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கனமழையின் காரணமாக பால்கர், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

உல்லாஸ் நதியில் வெள்ளம்

தானே மாவட்டத்தில் கல்யாண், முர்பாட், பத்லாப்பூர், அம்பர்நாத் பகுதியில் பலத்த மழை பெய்தது. உல்லாஸ் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பத்லாப்பூர் தாலுகா ஹென்ரே பாடா, சோனாவாலி பகுதியில் வசிக்கும் 250 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மகாடா காலனியில் தங்க வைக்கப்பட்டனர். கல்யாண்-முர்பாட் இடையே செல்லும் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழையை தொடர்ந்து பால்கர், தானே மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ராய்காட்

இதேபோல ராய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதாள கங்கா நதி மற்றும் சிப்லுன் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகே உள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் 5 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். சிப்லுன் அருகே பரசுராம் காட் பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பன்வெல்-மகாட் இடையே சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story