மும்பையில் கனமழை: 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் தாய்-மகன் பிணமாக மீட்பு
மும்பையில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் தாய், மகன் பிணமாக மீட்கப்பட்டனர்.
மும்பை,
மும்பையில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் தாய், மகன் பிணமாக மீட்கப்பட்டனர்.
கட்டிடம் இடிந்தது
மும்பையில் கடந்த சனிக்கிழமை மழை கொட்டி தீர்த்தது. மாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாமல் பெய்த மழையால் நகரமே வெள்ளகாடானது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் காட்கோபர் ராஜவாடி காலனி, சித்தரஞ்சன் நகரில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது. தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் கட்டிடத்தின் 3-வது மாடியில் சிக்கியிருந்த மனன் ஜம்புசரியா (வயது28), அவரது மனைவி மிகிகாவை பத்திரமாக மீட்டனர். இதேபோல முதல் தளத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆர்யன் பாலன்டேவையும் (21) மீட்டனர்.
தாய், மகன் பிணமாக மீட்பு
ஆர்யன் பாலன்டேவின் பாட்டி அல்கா மகாதேவ் (94), தந்தை நரேஷ் (56) கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். மீட்பு படையினர் முதலில் சத்தம் எழுப்பி அவர்கள் எங்கு சிக்கி இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தாய், மகனை கண்டறிய முடியவில்லை. போலீசார் மோப்பநாய் உதவியுடன் கண்டறிய முயன்றும் அதில் வெற்றி கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் மூதாட்டி அல்காவையும், காலை நேரத்தில் நரேசையும் இடிபாடுகளில் இருந்து பிணமாக மீட்டனர். நரேஷ் குடும்பத்துக்கு சொந்தமாக பங்களா வீடு உள்ளது. அங்கு சீரமைப்பு பணிகள் நடப்பதால் இடிந்த வீட்டுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு வந்து குடியேறி உயிரைவிட்டது தெரியவந்தது. இந்தநிலையில் மீட்பு பணிகள் முடிந்த பிறகு, பகுதி இடிந்த கட்டிடத்தை மாநகராட்சியினர் முழுமையாக இடித்து அகற்றினர். நேற்று முன்தினம் வில்லேபார்லே பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். மும்பையில் முதல் நாள் பெய்த மழைக்கே கட்டிட விபத்துகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.