சுதந்திர தின விழாவையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


சுதந்திர தின விழாவையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 Aug 2023 7:45 PM GMT (Updated: 13 Aug 2023 7:45 PM GMT)

சுதந்திர தினத்தையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பை,

சுதந்திர தினத்தையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தினம்

நாட்டின் சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மும்பையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சந்தேகத்துக்கு இடமானவர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடலோர பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள், கடற்படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மும்பையின் கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, கடலோரப்பகுதிகளில் போலீசாரும், கடலோர காவல் படையினரும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்களுக்கு கடல் மார்க்கத்தில் சந்தேகததுக்கு இடமான நபர்கள் படகு, கப்பல்களில் வந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரெயில் நிலையங்கள்

குறிப்பாக கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளும், அவர்களின் உடைமைகளும் சோதனை செய்யப்படுகிறது. இதேபோல, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து ரெயில்நிலைய வளாகங்களை சுற்றி வந்து கண்காணிக்கிறார்கள். மும்பையில் போலீசாருடன் அதிவிரைவு படையினர், கலவர தடுப்பு பிரிவினர், மாநில ரிசர்வ் படை போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சாலைகள், பதற்றமான பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடிசைப்பகுதிகளில் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய ரெயில் நிலையங்களான சி.எஸ்.எம்.டி., தாதர், எல்.டி.டி. உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் கொண்டு சீரான இடைவெளியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, சாதாரண உடையிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேகத்துக்கு இடமானவர்களை கண்காணிக்கின்றனர்.

50 ஆயிரம் போலீசார்

இதேபோல, மும்பையில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து விசாரித்து, முகவரியையும் பெற்ற பின்னரே அவர்களை போலீசார் விடுவிக்கின்றனர். இதுதவிர தனியார் தங்கும் விடுதிகளிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்குவோர் குறித்த முழு விவரங்களை விடுதி உரிமையாளர்கள் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, மும்பை முழுவதும் சுமார் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story