நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் 24 நோயாளிகள் உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் 24 நோயாளிகள் உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
மும்பை,
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் 24 நோயாளிகள் உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
நோயாளிகள் பலி
நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் நேற்று ஒரேநாளில் 12 குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய 3 என்ஜின் அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நர்சுகள் பணியிட மாற்றம்
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவ வசதிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. பல நர்சுகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மாற்று இடத்தில் பணி அமர்த்தப்படவில்லை. பல மருத்துவ எந்திரங்கள் வேலை செய்யவில்லை. இந்த ஆஸ்பத்திரியில் வெறும் 500 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் 1,200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நான் இதுகுறித்து அஜித்பவாரிடம் பேசுவேன். அரசு இதை உன்னிப்பாக கவனித்து நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டத்திற்கு புறம்பான ஆட்சி
இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவரும், எம்.பி.யுமான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், "நாந்தெட் ஆஸ்பத்திரியில் 24 நோயாளிகள் ஒரே நாளில் இறந்த சம்பவம் வெட்கக்கேடானது. தயவு செய்து இது இறப்பு என்று அழைக்காதீர்கள். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஆட்சி பொறுப்பேற்ற இந்த அரசின் முழுமையான அலட்சியம் காரணமாக நடந்த கொலையாகும். ஆடம்பரமான நிகழ்ச்சிகள் அல்லது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை திட்டமிடுவதில் இந்த அரசு மும்முரமாக இருக்கிறது. மாநிலத்திற்கு சேவை செய்வதே தங்களின் அடிப்படை வேலை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சி தேசிய செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறுகையில், "24 அப்பாவி மக்களின் இந்த மரணத்திற்கு 3 என்ஜின் அரசு தான் காரணம். அவர்கள் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றார்.