பன்வெல் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிப்பு
பன்வெல் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
மும்பை,
பன்வெல் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
தடம் புரண்டு விபத்து
பன்வெலில் இருந்து வசாய் இரும்பு சுருள்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் நேற்று மதியம் புறப்பட்டது. ரெயில் பிற்பகல் 3 மணியளவில் பன்வெல் - கலம்பொலி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயிலின் 4 பெட்டிகள், பிரேக்வேன் தடம் புரண்டது. தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கல்யாண், குர்லாவில் இருந்து விபத்து மீட்பு ரெயிலும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
ரெயில் சேவை பாதிப்பு
விபத்தில் சிக்கிய ரெயிலை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. விபத்து காரணமாக அந்த வழியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. கோரக்பூர் - பன்வெல், எல்.டி.டி. - பன்வெல், மும்பை சென்ட்ரல்-சாவந்த்வாடி, கொச்சிவெலி - இந்தூர், எர்ணாகுளம்- நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.