துணை முதல்-மந்திரியாக ஆக்கப்பட்ட பிறகு பட்னாவிஸ் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார்; உத்தவ் சிவசேனா விமர்சனம்
துணை முதல்-மந்திரியாக ஆக்கப்பட்ட பிறகு தேவேந்திர பட்னாவிஸ் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார் என உத்தவ் தாக்கரே சிவசேனா சாம்னாவில் விமர்சித்து உள்ளது.
மும்பை,
துணை முதல்-மந்திரியாக ஆக்கப்பட்ட பிறகு தேவேந்திர பட்னாவிஸ் திமிர்பிடித்தவராக மாறிவிட்டார் என உத்தவ் தாக்கரே சிவசேனா சாம்னாவில் விமர்சித்து உள்ளது.
டெல்லி மேலிடம் ஓரங்கட்டியது
மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது. யாரும் எதிர்பாராதவகையில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே முதல்-மந்திரியாக பதவி விகித்த அவரை பா.ஜனதா மேலிடம் துணை முதல்-மந்திரியாக்கியது. இந்தநிலையில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனது முதல் விரக்தியில் திமிர்பிடித்தவராக மாறிவிட்டதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் 'சாம்னா' பத்திரிகையில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சிவசேனாவுக்கு துரோகம் செய்யாமல் இருந்து இருந்தால், 2019 தேர்தலுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அதிகாரத்தை திரும்ப பெற்று இருக்க முடியும். இதேபோல டெல்லியில் உள்ள பா.ஜனதா மேலிட தலைவர்கள் அவரை ஓரங்கட்டிவிட்டனர். அவரை துணை முதல்-மந்திரியாக ஆக்கிவிட்டனர்.
திமிர்பிடித்தவராக மாறிவிட்டார்
அவர் முன்பு எதையும் சகித்துகொள்ளும் நபராக இருந்தார். ஆனால் துணை முதல்-மந்திரியாக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட விரக்தி அவரை சகிப்புதன்மையற்றவர், திமிர் பிடித்தவராக மாற்றி உள்ளது. அவர்கள் அவரை துணை முதல்-மந்திரி பதவியையும் அஜித்பவாருடன் பகிர்ந்து கொள்ள வைத்துவிட்டனர். அது அவருக்கு மேலும் துயரத்தை கொடுத்துவிட்டது. ஒரு நேரத்தில் அஜித்பவாரை ஜெயிலுக்கு அனுப்புவேன், அவரின் ஜெயில் தண்டனையை உறுதி செய்வேன் என பட்னாவிஸ் கூறியிருந்தார். ஆனால் அதே அஜித்பவாருடன் இன்று அவர் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் தற்போது பட்னாவிசுடன் மந்திரிகளாக உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் தற்போது அவரை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.