ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல் நடத்திய சிவசேனாவினர் 10 பேர் கைது


ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல் நடத்திய சிவசேனாவினர் 10 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2022 1:00 AM GMT (Updated: 28 Sep 2022 1:00 AM GMT)

ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. சந்தோஷ் பாங்கரின் காரை தாக்கிய சம்பவத்தில் சிவசேனாவினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. சந்தோஷ் பாங்கரின் காரை தாக்கிய சம்பவத்தில் சிவசேனாவினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார் மீது தாக்குதல்

உத்தவ் தாக்கரேவுக்காக பொது இடத்தில் கண்ணீர் வடித்து, பின்னர் சில நாட்களில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியவர் சந்தோஷ் பாங்கர். ஹிங்கோலி எம்.எல்.ஏ.வான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமராவதி அஞ்சான்காவ் பகுதியில் உள்ள தேவ்நாத் மகாராஜ் மத்துக்கு சென்றார்.

இந்தநிலையில் அவர் அங்கு இருந்து திரும்பிய போது சிவசேனாவினர் சிலர் அவரது காரை மறித்தனர். மேலும் அவர்கள் காரை கைகளால் தாக்கி, சந்தோஷ் பாங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அந்த நேரத்தில் காரில் எம்.எல்.ஏ.வுடன் அவரது மனைவி மற்றும் சகோதரியும் இருந்ததாக கூறப்படுகிறது.

10 பேர் கைது

இந்த சம்பவத்தை அடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சந்தோஷ் பாங்கரை தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார். இந்தநிலையில் சந்தோஷ் பாங்கர் கார் மீது நடந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த அஞ்சான்காவ் போலீசார் மகேந்திர திப்தே, அபிஜீத் பாவே, கஜானந்த் சவுத்ரி, ரவீந்திர நாதே, கஜனாந்த் பாதே, கஜனானந்த் விஜய்கர், ரஜிதர், சரத் பிஸ்கே, மயுர் ராய், சுனில் கடோலே உள்பட 10 சிவசேனாவினரை கைது செய்தனர்.

மேலும் ஒரு நாள் காவலில் எடுத்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story