முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 'இரட்டை வாள்-கேடயம்' சின்னம்
அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் ‘இரட்டை வாள்-கேடயம்’ சின்னம் ஒதுக்கி உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.
சிவசேனாவில் பிளவு
ஆனால் முதல்-மந்திரி பதவி போட்டி காரணமாக தேர்தலுக்கு பிறகு கூட்டணி முறிந்தது. மேலும் கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார். கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றினார்.
சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டுள்ளது
இடைத்தேர்தல்
இந்தநிலையில் மும்பை அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் ருதுஜா லட்கே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மறைந்த அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ஆவார். உத்தவ் தாக்கரே அணி வேட்பாளருக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதேபோல அந்தேரி கிழக்கு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். இந்த தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணி தங்கள் நிலைபாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
உத்தவ் தாக்கரேக்கு தீப்பந்தம்
இதற்கிடையே தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது.
இதையடுத்து உத்தவ் தாக்கரே அணியினர் உதயசூரியன், திரிசூலம், தீப்பந்தம் ஆகிய 3 சின்னங்களில் ஒன்றையும், சிவசேனா-பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா-பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா-உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய ெபயர்களில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தது.
இதில் திரிசூலம் மதம் சார்ந்தது என்பதாலும், உதயசூரியன் தி.மு.க.வின் சின்னம் என்பதாலும் அதை உத்தவ் தாக்கரேவுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அவர்களுக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு 'சிவசேனா-உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என்ற பெயரும் வழங்கப்பட்டது.
வாள்- கேடயம் சின்னம் ஒதுக்கீடு
இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணியினர் திரிசூலம், கதாயுதம், உதயசூரியன் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும் மற்றும் சிவசேனா-பாலாசாகேப் தாக்கரே, பால்தாக்கரேவின் சிவசேனா, பால்தாக்கரேவுடைய சிவசேனா ஆகிய பெயரில் ஒன்றை தருமாறு கேட்டு இருந்தனர்.
இதில், தேர்தல் ஆணையம் 'பால்தாக்கரேவின் சிவசேனா' என்ற பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கியது. ஆனால் அவர்கள் கேட்ட கதாயுதம், திரிசூலம் ஆகியவை மதம் சார்ந்த சின்னங்கள் என்பதாலும், உதய சூரியன் தி.மு.க.வின் சின்னம் என்பதாலும் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.
இந்தநிலையில் ஷிண்டே அணியினர் நேற்று சூரியன், இரட்டை வாள்- கேடயம், அரசமரம் ஆகிய 3 சின்னங்களில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் 'இரட்டை வாள்- கேடயம்' சின்னத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரவேற்பு
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்றுள்ளார்.
இருப்பினும் இந்த தேர்தலில் தற்போது கூட்டணியில் இருக்கும் பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவு அளிக்கும் பட்சத்தில் இந்த சின்னத்திற்கு தேர்தலில் வேலையின்றி போய்விட வாய்ப்பு உள்ளது.