பெண் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது பாதுகாப்பு பணியில் போலீஸ் இல்லை- சட்டசபையில் பட்னாவிஸ் தகவல்


பெண் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது பாதுகாப்பு பணியில் போலீஸ் இல்லை- சட்டசபையில் பட்னாவிஸ் தகவல்
x
தினத்தந்தி 27 July 2023 7:00 PM GMT (Updated: 27 July 2023 7:01 PM GMT)

மும்பை,

மும்பை கிர்காமை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று பேலாப்பூரில் தேர்வு எழுதுவதற்காக ரெயிலில் சென்றார். அப்போது சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் ஏறிய ஆசாமி தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். ரெயில் கிர்காவை நெருங்கியபோது பெண் சத்தம்போட்டதால் அவர் ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் குறித்து சட்டசபையில் நேற்று சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து கூறியதாவது:-

மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தான் ரோந்து போலீசார் பணியில் இருப்பார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் பிளாட்பாரங்களில் பணிக்கு நிறுத்தப்படுவார்கள். காலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் இந்த சம்பவம் நடந்ததால், ரெயில் பெட்டியில் போலீசார் யாரும் பணியில் இல்லை. இதனால் போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சம்பவம் ஜூன் 14-ந் தேதி அன்று நடந்தது. அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story