மகாத்மா காந்தி பற்றி அவதூறு பேச்சு: இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு
மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து கூறிய இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி பிடே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை,
மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து கூறிய இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி பிடே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவதூறு பேச்சு
அமராவதி மாவட்டம் பத்னேரா சாலையில் உள்ள பாரத் மங்கல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'ஸ்ரீ சிவ் பிரதிஷ்தான் இந்துஸ்தான்' அமைப்பின் நிறுவனர் சம்பாஜி பிடே தேசத்தந்தை மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நந்த்கிஷோர் குயதே, அமராவதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் மராட்டிய சட்டசபையிலும் எதிரொலித்தது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலாசாகேப் தோரட், சம்பாஜி பிடே மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசிய சம்பாஜி பிடே சுதந்திரமாக சுற்றித்திரிவதற்கு உரிமை இல்லை. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பேசினார்.
வழக்குப்பதிவு
இந்தநிலையில் சம்பாஜி பிடேவை கைது செய்ய வலியுறுத்தி அமராவதி நகரில் உள்ள ராஜ்கமன் சதுக்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோமதி தாக்கூர், முன்னாள் மந்திரி சுனில் தேஷ்முக் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் போராட்டத்தின் போது சம்பாஜி பிடேவின் பதாகைகளை கிழித்து எரிந்தனர். யவத்மால் மாவட்டத்திலும் அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சம்பாஜி பிடே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் மீது மதம், இனம், பிறப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் மக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.