நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் குறித்து விவாதம் - பிரதமர் மோடிக்கு சிவசேனா கோரிக்கை


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் குறித்து விவாதம் - பிரதமர் மோடிக்கு சிவசேனா கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2023 7:30 PM GMT (Updated: 30 Jun 2023 7:30 PM GMT)

பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதம் நடத்த வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

மும்பை,

பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதம் நடத்த வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

சிவசேனா ஆதரவு

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ள பொது சிவில் சட்டத்துக்கு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரான ராகுல் செவாலே எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் மராட்டிய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை கேட்டுக்கொள்கிறோம். மேலும் பொது சிவில் சட்டத்தில் மராட்டியத்தின் நிலைப்பாட்டை கூறும் வகையில் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் விவாதம்

இதேபோல பொது சிவில் சட்டம் குறித்து மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டு கொள்கிறேன். பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சிவசேனா கொறடா கட்சியின் அனைத்து எம்.பி.க்களுக்கும் உத்தரவிடுவார். பொது சிவில் சட்டம் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் 3 கனவுகளில் ஒன்றாகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும், நாட்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது பால்தாக்கரேவின் கனவு. இதில் 2-ஐ பிரதமர் மோடி நிறைவேற்றிவிட்டார். 3-வது கனவும் விரைவில் நிறைவேறும். எல்லா மக்களின் நலனுக்காகவும் பால் தாக்கரே பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார். குறிப்பாக பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள்.

அம்பேத்கர் ஆதரவு

பால் தாக்கரே வெளிப்படையாக பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார். ஆனால் உத்தவ் தாக்கரே பொது சிவில் சட்டத்தால் இந்துகள் பாதிக்கப்படுவார்கள் என்ற தவறான தகவல்களை பரப்புகிறார். உத்தவ் தாக்கரே எதிர்ப்பார் என்று தெரிந்தே முஸ்லிம் தனிவாரிய உறுப்பினர்கள் அவரை சந்தித்து பேசி உள்ளனர். அவரின் உண்மையான முகம் தெரிந்துவிட்டது. மராட்டிய மக்கள் அவரை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. உத்தவ் தாக்கரே கூறுவதுபோல இந்த சட்டம் இந்துக்களை பாதிக்காது. காந்திகளை (காங்கிரஸ்) தான் பாதிக்கும். எனவே தான் அவர் அந்த சட்டத்தை எதிர்க்கிறார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஒரு நாடு, ஒரே சட்டத்தில் உறுதியாக உள்ளது. டாக்டர் அம்பேத்கர் கூட பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அதை 75 ஆண்டுகளாக அமல்படுத்த காங்கிரஸ் தான் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story