ஆபாச படங்களை இணைத்து மனு தாக்கல் செய்த வக்கீலுக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவு
ஆபாச படங்களை இணைத்து மனு தாக்கல் செய்த வக்கீலுக்கு மும்பை ஐகோர்ட்டு அபராதம் விதித்து உள்ளது.
மும்பை,
ஆபாச படங்களை இணைத்து மனு தாக்கல் செய்த வக்கீலுக்கு மும்பை ஐகோர்ட்டு அபராதம் விதித்து உள்ளது.
மனுவுடன் ஆபாச படங்கள்
மும்பை ஐகோர்ட்டில் கணவர் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய கோரி பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை நீதிபதி ரேவதி மோகிதே மற்றும் எஸ்.எம். மோதக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மனுவுடன் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஆணும், புகார் அளித்த பெண்ணும் நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த படங்களை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி மனுவை தாக்கல் செய்த வக்கீலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வக்கீலுக்கு அபராதம்
மேலும் நீதிபதிகள் மனுதாரரின் வக்கீல் பொது அறிவு இல்லாமல் ஆட்சேபனைக்குரிய படங்களை மனுவுடன் இணைத்து இருக்கிறார் என கண்டித்தனர். மேலும் நீதிபதிகள், "குறிப்பிட்ட மனு கோா்ட்டு பதிவாளர் உள்ளிட்ட பலதுறைகளுக்கு செல்லும் என்பதை கூட வக்கீல்கள் உணரவில்லை. மேலும் இதுபோன்ற படங்களை இணைப்பது மனுதாரர்களின் தனி உரிமையை மீறுவது" என கூறி மனுவுடன் இணைக்கப்பட்டு இருந்த ஆட்சேபனைக்குரிய படங்களை நீக்க வக்கீலுக்கு உத்தரவிட்டனர். மேலும் மனுவுடன் ஆட்சேபனைக்குரிய படங்களை இணைத்த வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.