கொரோனா சிகிச்சை மைய முறைகேடு - ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான கட்சி நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை
கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான கட்சி நிர்வாகி சூரஜ் சவானிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
மும்பை,
கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான கட்சி நிர்வாகி சூரஜ் சவானிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
சிகிச்சை மைய முறைகேடு
மும்பையில் கொரோனா பரவலின் போது ஐம்போ சிகிச்சை மையங்கள் அமைத்ததில் முறைகேடு நடந்ததாக கடந்த வாரம் அமலாக்கத்துறை மும்பையில் தொழில் அதிபர் சூரஜ் பட்கர், உத்தவ் தாக்கரே சிவசேனா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் சூரஜ் சவான், ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்களின் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடத்தியது. இதில் தொழில் அதிபர் சூஜித் பட்கர் சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவர் ஆவார். சூரஜ் சவான் ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. சோதனையில் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், ரூ.68 லட்சம் மற்றும் ரூ.2.4 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் முறைகேடு தொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்களும் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை விசாரணை
சோதனை முடிந்த பிறகு விசாரணைக்கு ஆஜராக சூரஜ் சவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்தநிலையில் அவர் நேற்று அமலாக்கத்துறையில் ஆஜரானார். பகல் 12.30 மணியளவில் அவர் பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வாட்ஸ்அப் உரையாடல், டைரியில் இடம் பெற்று உள்ள தகவல்கள் குறித்து கேள்வி கேட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சூரஜ் சவான் கொரோனா சிகிச்சை மைய ஒப்பந்தம் வாங்கி கொடுக்க மாநகராட்சிக்கும், ஒப்பந்ததாரருக்கும் இடை தரகராக இருந்ததாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.