கோடிக்கணக்கில் பணமோசடி செய்த கட்டுமான அதிபர், ஒப்பந்ததாரர் கைது
இரு வேறு சம்பவங்களில் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த கட்டுமான அதிபர், ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
இரு வேறு சம்பவங்களில் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த கட்டுமான அதிபர், ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.12.42 கோடி மோசடி
மும்பையை சேர்ந்தவர் ஜேயேஷ் ஷா(வயது59). கட்டுமான அதிபரான இவர், கடந்த 2012-ம் ஆண்டில் ஓஷிவாராவில் புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டுவதாகவும், வீடுகளை முன்பதிவு செய்து கொள்ளும்படி விளம்பரம் படுத்தி இருந்தார். இதனால் 100-க்கு மேற்பட்டோர் வீடுகளை முன்பதிவு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட கால தவணைக்குள் வீடு வழங்கப்பட வில்லை. பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு அவர் தராமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 30 பேர் சேர்ந்து போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில், ரூ.12 கோடியே 42 லட்சம் அளவில் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது.
போலீசில் சிக்கினார்
இதனால் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றினர். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் காந்திவிலியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி நேற்று போலீசார் அங்கு சென்று ஜேயேஷ் ஷாவை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 27-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒப்பந்ததாரர் கைது
இதேபோல நடந்த மற்றொரு சம்பவத்தில் மும்பையை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரரான மங்கேஷ் சாவந்த் (60) என்பவர் கட்டுமான அதிபர் ஒருவரிடம் பவாய் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்ட ஒப்பந்தம் செய்து இருந்தார். இதற்காக கட்டுமான அதிபர் ரூ.15 கோடியை ஒப்பந்ததாரரிடம் செலுத்தி இருந்தார். ஆனால் ஒப்பந்ததாரர் மங்கேஷ் சாவந்த் அந்த பணத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக செலவழித்து மோசடி செய்தார்.
இது பற்றி கட்டுமான அதிபர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் ஒப்பந்ததாரர் மங்கேஷ் சாவந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.