சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோர காங்கிரஸ் திட்டம் - இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோர காங்கிரஸ் திட்டம் - இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தினத்தந்தி 3 July 2023 7:30 PM GMT (Updated: 3 July 2023 7:30 PM GMT)

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இன்று அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மும்பை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இன்று அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

உரிமைகோர திட்டம்

மராட்டிய எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாகி உள்ளது. அஜித்பவாருக்கு 35 முதல் 40 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சரத்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என தெரிகிறது. இதேபோல உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். எனவே சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவர் பதவியை உரிமைகோர காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இதுதொடர்பாக விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் எச்.கே. பாட்டீல் கலந்து கொள்ள உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் சட்டசபை தலைவர் பாலாசாகேப் தோரட் கூறுகையில், " காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோருவது தொடர்பாக விவாதிக்கப்படலாம்" என்றார்.

பிரிதிவிராஜ் சவான் கருத்து

அதே நேரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஜித்தேந்திர அவாத்தை நியமித்து உள்ளார். எனினும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், " எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் உரிமை கோருவதில் நியாயம் உள்ளது" என கூறியுள்ளார். அதேநேரம் தேசியவாத காங்கிரசுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்பது தெரிந்த பிறகு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரிதிவிராஜ் சவான் கூறியுள்ளார்.

...........


Next Story