ஜல்னா தடியடியை கண்டித்து தானே நகரில் இன்று முழு அடைப்பு - மராத்தா அமைப்பு, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தது


ஜல்னா தடியடியை கண்டித்து தானே நகரில் இன்று முழு அடைப்பு - மராத்தா அமைப்பு, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தது
x
தினத்தந்தி 11 Sept 2023 12:45 AM IST (Updated: 11 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஜல்னா தடியடி சம்பவத்தை கண்டித்து தானேயில் இன்று(திங்கட்கிழமை) முழு அடைப்புக்கு சாகல் மராத்தா மோச்சா அழைப்பு விடுத்துள்ளது.

தானே,

ஜல்னா தடியடி சம்பவத்தை கண்டித்து தானேயில் இன்று(திங்கட்கிழமை) முழு அடைப்புக்கு சாகல் மராத்தா மோச்சா அழைப்பு விடுத்துள்ளது.

போலீஸ் தடியடி

ஜல்னா மாவட்டத்தில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கு வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் அங்குள்ள சாலையில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் 12 போலீசார் உள்பட பலர் காயம் அடைந்தனர்.

முழு அடைப்பு

இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்த தடியடி சம்பவத்திற்கு மராத்தா சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்தரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்தநிலையில் ஜல்னாவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தானே நகரில் இன்று 11-ந் தேதி முழு அடைப்புக்கு(பந்த்) சகால் மராத்தா மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு சம்பாஜி பரிகடே அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் உள்ளூர் தலைவர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் உள்ளூர் மக்களும் இந்த முழு அடைப்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணியை சேர்ந்த சுகாஸ் தேசாய், சிவசேனா தலைவர் பரதீப் ஷிண்டே, நவநிர்மாண் சேனா தலைவர் ரவீந்திர மோர், அவினாஸ் ஜாதவ், மராத்தி கராந்தி மோர்ச்சா நகர தலைவர் ரமேஷ் அம்ப்ரே மற்றும் காங்கிரஸ் தலைவர் விக்ராந்த் சவான் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story