ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ரெயில்வே தலைமை என்ஜினீயர் கைது


ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ரெயில்வே தலைமை என்ஜினீயர்  கைது
x
தினத்தந்தி 28 Sep 2022 9:00 PM GMT (Updated: 28 Sep 2022 9:00 PM GMT)

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ரெயில்வே தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அவரது வீடு, அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.13 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மும்பை,

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ரெயில்வே தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அவரது வீடு, அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.13 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ரூ.1 லட்சம் லஞ்சம்

மத்திய ரெயில்வேயில் தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயராக இருந்து வருபவர் அசோக்குமார் குப்தா. இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தனக்கு வழங்கப்பட வேண்டிய தொகைக்காக விண்ணப்பித்து இருந்தார். இதனை பரிசீலனை செய்த அவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டு உள்ளார்.

இதற்கு ஒப்பந்ததாரர் பணம் தருவதாக கூறி சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசில் புகார் அளித்தார். சி.பி.ஐ. போலீசார் யோசனையின் பேரில் ரூ.1 லட்சத்தை ஒப்பந்ததாரர் கொண்டு சென்றார். அப்போது, அங்கிருந்த அசோக் குமார் குப்தா தனது கார் டிரைவரிடம் பணத்தை கொடுக்கும்படி தெரிவித்தார்.

கைது

இந்த லஞ்ச பணத்தை வாங்கிய டிரைவரை சி.பி.ஐ. போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் அசோக்குமார் குப்தா மற்றும் ஆதித்யா திபர்வால் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அசோக்குமார் குப்தா வீட்டில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை போட்டனர்.

இதில், ரூ.8 கோடி மதிப்புள்ள முதலீட்டு பத்திரங்கள், டெல்லி, நொய்டா, ஹரித்வார் மற்றும் டோராடூனில் ரூ.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டின் சொத்து பத்திரங்கள், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 3 வெளிநாட்டு வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் செய்த ஆவணங்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

ரூ.13 கோடி மதிப்பு

இதைத்தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள என்.ஆர்.ஐ. வங்கி கணக்குகள், வேறு சில வங்கி கணக்குகள் அடங்கிய புத்தகம், வங்கி லாக்கரை மீட்டனர்.

சி.பி.ஐ. போலீசார் மும்பை, கொல்கத்தா, காசியாபாத், நொய்டா, டேராடூன் மற்றும் டெல்லி உள்ளிட்ட அவரது தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம், சொத்து ஆவணங்களின் மொத்த மதிப்பு ரூ.13 கோடி என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story