கனரா வங்கியிடம் ரூ.538 கோடி மோசடி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு 14-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
கனரா வங்கியிடம் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் அமலாக்கத்துறை காவலை வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
கனரா வங்கியிடம் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் அமலாக்கத்துறை காவலை வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
வங்கி கடன் மோசடி
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில நிர்வாகிகள் கனரா வங்கியிடம் ரூ.538 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து இருந்தது. இது தொடர்பாக கடந்த மே மாதம் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையினர் நரேஷ் கோயல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
இந்த வழக்கில் கடந்த 1-ந்தேதி நரேஷ் கோயலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. அவரது விசாரணைக்காலம் முடிவடைந்ததை அடுத்து நேற்று மீண்டும் அவர் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டில் நரேஷ் கோயல் தனது உடல் உபாதைகளை நீதிபதியிடம் தெரிவித்து ஆஸ்பத்திரியில் மனைவியுடன் மருத்துவ சிகிச்சை பெற பரிசீலிக்குமாறு கோரினார்.
காவல் நீட்டிப்பு
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், எங்களால் அடிப்படை வசதிகளை வழங்க முடியும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் குறிப்பிட்ட தேவைகளை எங்களால் தீர்த்துவைக்க முடியாது. தேவைப்பட்டால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லலாம்" என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வாக்குமூலம் பதிவு செய்ய அவரின் காவலை மேலும் 4 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நரேஷ் கோயலின் அமலாக்கத்துறை காவலை வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.