பெண்ணை கற்பழித்து கொலை மிரட்டல் விடுத்த தொழில் அதிபர் கைது
ரூ.88 லட்சத்தை திருப்பி கேட்ட பெண்ணை கற்பழித்து கொலை மிரட்டல் விடுத்த தொழில் அதிபரை போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
மும்பை,
ரூ.88 லட்சத்தை திருப்பி கேட்ட பெண்ணை கற்பழித்து கொலை மிரட்டல் விடுத்த தொழில் அதிபரை போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
ரூ.88 லட்சம் கடன்
மும்பை போரிவிலியை சேர்ந்த 48 வயதுயுடைய பெண்ணுக்கு கடந்த 2014-ம் ஆண்டு தொண்டு நிறுவனம் நடத்தி வந்த மவுரிஸ் பாய் (50) என்ற தொழில் அதிபரின் அறிமுகம் கிடைத்தது. கடந்த 2015-ம் ஆண்டு தொழில் அதிபர் மவுரிஸ் பாய் அப்பெண்ணிடம் இருந்து தொழிலை விரிவுப்படுத்துவதாக கூறி ரூ.88 லட்சம் கடனாக பெற்றார்.
இதற்காக மாதந்தோறும் 3 சதவீதம் வட்டி தருவதாக அப்பெண்ணிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் வட்டியும் அசலும் அப்பெண்ணிற்கு அவர் திருப்பி தரவில்லை. இதனால் அப்பெண் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது தான் தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளி எனவும், உனது கணவரை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.
தொழில் அதிபர் கைது
மேலும் அப்பெண்ணை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மிரட்டி கற்பழித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து கடந்த 7-ந்தேதி எம்.எச்.பி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் மவுரிஸ் பாயை விசாரணைக்காக தேடினர். அவர் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்தது.
நேற்று அவர் விமானம் மூலம் மும்பைக்கு வரவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விமான நிலையம் சென்று அங்கு வந்த மவுரிஸ் பாயை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.