மும்பை ரெயில் நிலையத்தில் சிறுமியை கடத்திய சிறுவன் மீது கொடூர தாக்குதல்; சமூக வலைதளத்தில் வீடியோ பரவியதால் பரபரப்பு
மும்பை ரெயில் நிலையத்தில் சிறுமியை கடத்திய சிறுவன் மீது கும்பல் கடுமையாக தாக்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
மும்பை ரெயில் நிலையத்தில் சிறுமியை கடத்திய சிறுவன் மீது கும்பல் கடுமையாக தாக்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடத்தல்
தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணை வேறு மதத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் கடத்தி சென்றதாக பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்தநிலையில் சிறுவன் அந்த சிறுமியுடன் பாந்திரா ரெயில்வே டெர்மினல் ரெயில் நிலையத்திற்கு வந்தார். இது குறித்து தகவல் அறிந்த 12 பேர் கொண்ட கும்பல் ரெயில் நிலையத்திற்கு வந்தது, 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டபடியே அந்த சிறுவனை பிடித்து கடுமையாக தாக்க தொடங்கியது. சிறுவனை நாலாபுறமும் இருந்து கடுமையாக தாக்கியதுடன், ரெயில் நிலையத்திற்கு வெளியே அவரது முடியை பிடித்து இழுத்து சென்றது. பின்னர் சிறுவனை அந்த கும்பல் பாந்திரா கிழக்கில் உள்ள நிர்மல்நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றது. ஆனால் சிறுமி கடத்தல் வழக்கு அம்பர்நாத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் சிறுவன் அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 21-ந் தேதி நடைபெற்றதாக தெரிகிறது.
வீடியோ வைரல்
இதற்கிடையே ரெயில் நிலையத்தில் சிறுவனை கும்பல் தாக்கிய சம்பவங்களை யாரோ செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ பரவியதை அடுத்து ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனால் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
முறையாக புகார்
இது குறித்து நிர்மல்நகர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரெயில் நிலைய வளாகத்தில் தாக்குதல் சம்பவம் நடந்ததால், விசாரணை நடத்த ரெயில்வே போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார். ரெயில்வே போலீசின் பாந்திரா பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "தாக்குதலுக்கு ஆளான சிறுவனை அடையாளம் கண்டு, அவரது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களிடம் தாக்கியவர்கள் மீது முறையான புகார் அளிக்கும்படி கேட்டுக்கொண்டு உள்ளோம். அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்குவோம். சிறுவனை தாக்கியவர்கள் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளனர்" என்றார்.