மும்பைக்கு குடிநீர் வழங்கும் பாட்சா அணை நிரம்பியது- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மும்பைக்கு குடிநீர் வழங்கும் பாட்சா அணை நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தானே,
மும்பைக்கு குடிநீர் வழங்கும் பாட்சா அணை நிரம்பியதை தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பாட்சா அணை
பருவமழை பெய்து வரும் நிலையில் மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் மோடக்சாகர், துல்சி மற்றும் தான்சா முற்றிலும் நிரம்பியது. தற்போது 4-வதாக முர்பாத் தாலுகா சாகாப்பூரில் உள்ள பாட்சா அணை முற்றிலும் நிரம்பியதாக மாவட்ட அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், "கனமழை காரணமாக நேற்று மதியம் 12.30 மணி அளவில் பாட்சா அணை நிரம்பியது. முழு கொள்ளளவு நிரம்பியதை தொடர்ந்து 6 ஆயிரத்து 215 கனஅடி உபரிநீர் 5 மதகுகள் வழியாக நேற்று காலை 11 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
இதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாகாப்பூர் மற்றும் முர்பாத் தாலுகாவில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், குறிப்பாக சப்கான் பாலம் அருகே வசிக்கும் மக்கள் உஷாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 4 ஏரிகள் நிரம்பியதை தொடர்ந்து மற்ற ஏரிகளான மேல்வைத்தர்ணா, வைத்தர்ணா மற்றும் விகார் ஏரிகள் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
------------